Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News

எதிர் அணியினர் போட்ட பூட்டை உடைக்க முயற்சி போலீசாருடன் மோதிய நடிகர் விஷால் கைது தயாரிப்பாளர் சங்கத்துக்கு ‘சீல்’ தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

எதிர்தரப்பினர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு போட்ட பூட்டை உடைக்க சென்ற போது, போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.

எதிர்தரப்பினர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு போட்ட பூட்டை உடைக்க சென்ற போது, போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

 

நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் கதிரேசன், எஸ்.எஸ். துரைராஜ் ஆகியோர் செயலாளர்களாகவும் உள்ளனர். விஷாலுக்கு சங்கத்தில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

நேற்றுமுன்தினம் அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த தயாரிப்பாளர் கள் சென்னை தியாக ராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் திரண்டு, விஷாலுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தயாரிப்பாளர் சங்கத்தில் தவறுகள் நடப்பதாகவும் ரூ.7 கோடிக்கு மேல் முறைகேடு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

 

பின்னர் சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டனர். அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தையும் பூட்டினார்கள்.

 

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில் தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கதிரேசன், துரைராஜ் ஆகியோர் நேற்று காலை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்துக்கு சென்று, “சங்க அலுவலகத்தில் போடப்பட்டுள்ள பூட்டை உடைத்து உள்ளே செல்ல இருக்கிறோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கோரி மனு அளித்துவிட்டு, சங்க அலுவலகத்துக்கு சென்றனர்.
விஷால் ஆதரவு தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரவீண் காந்த், பாலு, ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார், கப்பார், தங்கராஜ், சங்கர், ஞானவேல், செந்தில், எஸ்.எஸ்.குமரன், ராமச்சந்திரன், ராஜா உள்பட ஏராளமானோர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள், பூட்டு போட்டவர்களை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.

 

இதை அறிந்ததும் எதிர்கோஷ்டியினரும் அங்கு திரண்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

 

இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் விஷாலும் அங்கு வந்தார். சங்க அலுவலகத்தின் பூட்டை திறக்கும்படி அவர் போலீசாரிடம் வற்புறுத்தினார். ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை. இதனால் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “எனக்கு வழிவிடுங்கள். பூட்டை உடைத்து நான் உள்ளே செல்வேன்” என்றார்.

 

போலீசார் அதை ஏற்காமல், “சங்கங்களின் பதிவாளர் வந்த பிறகு திறக்கலாம்” என்றனர்.

 

ஆனால் விஷால் பூட்டை உடைத்து உள்ளே செல்வதில் பிடிவாதமாக இருந்தார். “சட்டவிரோதமாக பூட்டு போட்டு உள்ளனர். இதற்கு போலீசார் துணைபோகக் கூடாது” என்று ஆவேசமாக பேசினார். பின்னர் பூட்டை உடைத்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார். இதனால், கைது செய்யப்போவதாக அவரை போலீசார் எச்சரித்தனர்.

 

இதைத்தொடர்ந்து விஷாலே போலீஸ் வேனில் ஏறி அமர்ந்தார். அவருடன் துரைராஜ், கதிரேசன், அன்பு, சதீஷ்குமார், ராமநாதன், சங்கர், பிரவீன்காந்த் ஆகியோரும் வேனில் ஏறினார்கள். விஷால் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்து தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

 

பின்னர் இரவு 7½ மணி அளவில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சட்ட விரோதமாக கூடியதாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் நடிகர் விஷால் உள்ளிட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதேபோல் சங்க அலுவலகத்துக்கு சட்ட விரோதமாக பூட்டு போட்டதாக எதிர்தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

 

அத்துடன் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 145-ன் கீழ் இரு தரப்பினரும் சங்க அலுவலகத்திற்குள் நுழைய தடை விதித்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைத்து இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, விஷாலின் எதிர் தரப்பினர் அளித்த புகார் தொடர்பாக, சங்கங்களின் பதிவுத்துறை அதிகாரிகள் இருவர் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். கிண்டி தாசில்தார் ராம்குமாரும் அங்கு வந்தார். பின்னர் அதிகாரிகள் சங்க அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர். அலுவலக சாவி தாசில்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

 

முன்னதாக, தான் கைது செய்யப்பட்ட போது, விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 

சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டது தவறான அணுகுமுறை. இதை செய்ய அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெளியூரில் படப்பிடிப்பில் இருந்த நான் சென்னை திரும்பியதும் அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் என்னை போலீசார் அனுமதிக்காமல் கைது செய்தனர்.

 

சங்க நிர்வாகிகள் அலுவலகம் செல்ல தடை விதித்து விட்டனர். என்மீது ஆதாரம் இல்லாமல் சில தயாரிப்பாளர்கள் குற்றம் சொல்கிறார்கள். இளையராஜா மூலம் இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் பணத்தில் சிறு தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வழங்க முடிவு செய்தோம். இந்த நல்ல காரியம் நடந்து விடக்கூடாது என்று தடுக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.

 

யாரும், யார் வீட்டில் வேண்டுமானாலும் பூட்டு போடலாம் என்பதுபோல் இந்த சம்பவம் உள்ளது. சங்கத்தில் ஊழல் முறைகேடுகள் நடக்கவில்லை. பொதுக்குழுவில் வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படும்.

 

இவ்வாறு விஷால் கூறினார்.

Related posts